மதுரை வில்லாபுரம் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த செவிலியரை, அவரது தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (24) என்ற இளம்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.

ஆனால் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும், தான் வேறொருவரைக் காதலிப்பதாகவும் கூறி பிரியங்கா வீட்டை விட்டு வெளியேறினார்.

போலீஸ் விசாரணைக்குப் பிறகு காப்பகத்தில் இருந்த அவரை, தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் பாலமுருகன் ஆகியோர் சமாதானம் பேசி மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

மதுரையில் உள்ள மூத்த மகள் வீட்டிற்குப் பிரியங்காவை அழைத்துச் சென்ற தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் பாலமுருகன், அவரை ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டினர்.

“நாங்கள் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்யாமல் குடும்பத்தை அசிங்கப்படுத்திவிட்டாய்” எனக் கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியங்காவைச் சரமாரியாகக் குத்தினர்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் பாலமுருகனை அவனியாபுரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.