முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, ரூ. 75,000 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்ற மற்ற விவசாயிகளுக்கு ரூ. 35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவது போல, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றியுள்ளது என்று சாடியுள்ளார். மேலும் தனது கண்டன அறிக்கையில், தேர்தல் நேரத்தில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், ஆட்சிக்கு வந்தால் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என TVK அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி, விவசாயிகளிடையே பாகுபாடு காட்டி தரம் பிரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றாற்போல கடன் அளவும் மாறுபடும் என்பதை அனுபவமற்ற முதலமைச்சர் உணரவில்லை என விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, TVK தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும், பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.