காரைக்காலில் பணியாற்றி வந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், சமீபத்தில் புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பான ஒரு தனிப்பட்ட விவகாரம் தற்போது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் பகுதியில் பணியாற்றிய காலத்தில், எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அந்த அதிகாரிக்கும், அங்கு பணியாற்றிய திருமணமான பெண் காவலருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணிசார்ந்த தொடர்பாக ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் எல்லை மீறியதாகவும், இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த உயர் அதிகாரி புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட போதும், இருவருக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. நேரில் சந்திக்க முடியாத சூழலில், செல்போன், வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலமாக தொடர்பு தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பெண் காவலர் அடிக்கடி செல்போனில் பேசுவதைக் கவனித்த அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கணவரும் காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மனைவியின் செல்போன் கால் பதிவுகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதில், ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கணவர் காரைக்கால் சீனியர் எஸ்பி லட்சுமி சவுஜன்யாவை நேரில் சந்தித்து, தன்னிடம் இருந்த ஆதாரங்களை சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, பெண் காவலர் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்த மன அழுத்தத்தின் காரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட அந்த உயர் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான உண்மை விவரங்கள் விசாரணை முடிவில் தெளிவாகும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழக காவல் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேர்மையாக பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் மத்தியில், சிலரின் தனிப்பட்ட ஒழுக்கக் குறைபாடுகள் துறையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக காவல் துறை வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.