மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு பணியிடங்கள், ஆசிரியர் தேர்வுகள், மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் எழுத்துத் தேர்வுகளில் முறைகேடுகள் அதிகரித்து வருவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் தேர்வு முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

இந்த ஆள்மாறாட்ட முறைகேடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்வு மையங்களில் முகம் சரிபார்க்கும் பயோ மெட்ரிக் சோதனை முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் போது, டெல்லியில் உள்ள சில தேர்வு மையங்களில் இந்த பயோ மெட்ரிக் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில், தேர்வர்களின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டன.

இந்த சோதனை முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு முதல் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முக அடையாள பயோ மெட்ரிக் சோதனை கட்டாயமாக அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் பெருமளவில் தடுக்கப்படும் என என்.டி.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.