உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அலோக் வர்மா என்ற 27 வயது வாலிபர், ராதே நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கிய அவர், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை.

உள்ளே செல்போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அலோக் வர்மா மின்விசிறியில் தூக்கில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசாரின் விசாரணையில், அலோக் வர்மாவின் முதல் மனைவி ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் மறுமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் முதல் மனைவியின் பிரிவால் மிகுந்த மனவேதனையில் இருந்த அவர், தற்கொலைக்கு முன்பாகத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் முதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் உன்னுடன் வந்து விடுகிறேன், அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அலோக் வர்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.