உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தாம் 17 வயது சிறுமியாக இருந்தபோது, பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணை முதலில் லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறி, உத்தர பிரதேச போலீசார் கடந்த 2018 ஏப்ரல் 2-ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணை காவலில் இருந்த அவர், 2018 ஏப்ரல் 9-ம் தேதி சிறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்குகள் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் 2019 டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரண சம்பவத்தில் தொடர்புடையதும் குல்தீப் சிங் செங்கார் என்பதும் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.
உன்னாவ் பெண் பயணித்த கார் விபத்து தொடர்பான வழக்கில் இருந்து செங்கார் விடுவிக்கப்பட்டிருந்தாலும், பாலியல் பலாத்காரம் மற்றும் தந்தை மரண வழக்குகள் காரணமாக அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி, குல்தீப் சிங் செங்காருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.15 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி ஜாமீன் பெறலாம் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த உத்தரவை நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் அடங்கிய அமர்வு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், “இந்த தீர்ப்பால் எங்களுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கள் தந்தையையும், மாமாவையும் கொலை செய்துள்ளார். என் சகோதரிக்கும் அளவிட முடியாத துன்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரை விடுதலை செய்வதாக இருந்தால், எங்களையே சிறையில் அடையுங்கள். குறைந்தபட்சம் உயிர் பிழைத்துக் கொள்வோம். செங்காரின் அடியாட்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால், பயத்துடனேயே வாழ்ந்து வருகிறோம்,” என்றார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரண வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து காவலிலேயே இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
