திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புனித சவேரியார் கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், முதல்வர் காட்வின் ரூபஸ் பேசிய பேச்சு இப்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. அவர் பேசும்போது, “நான் விஜய்க்கு எதிரி கிடையாது. ஆனால், 41 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான ஒருவரை இளைஞர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?” என்று ஆதங்கப்பட்டார். சினிமா நடிகர்களின் பின்னால் இளைஞர்களும், குழந்தைகளும் கண்மூடித்தனமாகச் செல்வது தமக்கு வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

​நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்பது நல்ல விஷயங்களைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதுதான் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், இன்றைய இளைஞர்கள் திரையில் காட்டப்படும் தவறான பிம்பங்களை நிஜம் என்று நம்பித் தடம் மாறுவது கவலை அளிப்பதாகக் கூறினார். ஒரு கல்வியாளராக மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர் முன்வைத்த இந்த விமர்சனம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நோக்கிய நேரடிச் சாடலாகவே பார்க்கப்படுகிறது.