தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 23) தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செயலாளர்களை அறிவிக்க உள்ள நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கட்சிக்காக ஆரம்ப காலம் முதல் உழைத்து வரும் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல், புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடி மற்றும் திருச்சியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

​தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், தகுதியானவர்களுக்கே பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டு வரும் இவர்களால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இந்தச் சூழலைச் சமாளிக்கத் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தலைவர் விஜய்யின் முடிவுக்குப் பின்னரே இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் என்பதால், தொண்டர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.