அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று பணியாற்றுவதற்கான H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதில், டிரம்ப் நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விசா விண்ணப்பதாரர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா முறைகேடுகளைத் தடுப்பதற்கும், தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பேஸ்புக், எக்ஸ்  இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் தரவுகள் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.

மேலும், விசா விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பதையும், தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதையும் இதன் மூலம் உறுதி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமூக வலைதள ஆய்வு காரணமாக, விசா வழங்கும் நடைமுறை வழக்கத்தை விட கூடுதல் காலம் எடுக்கக்கூடும் எனவும், எனவே விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிலையில், விடுப்புக்காக இந்தியாவிற்கு திரும்பியுள்ள பலர், விசா கிடைக்காத காரணத்தால் மீண்டும் தங்களது பணியிடங்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அவர்களுக்குச் சிக்கலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.