தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இலவச வேட்டி-சேலை ஆகியவை இடம்பெறும் எனத் தெரிகிறது. குறிப்பாக, சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், இம்முறை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணமாக ரூ. 3,000 வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, பொங்கல் பரிசாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வழக்கம் போல் டோக்கன் முறையில் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் ஜனவரி முதல் வாரத்தில் ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மக்கள் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என்றும், ஜனவரி 10-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு சென்றடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
