கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஐ.எம்.விஜயன், வறுமையான சூழலில் வளர்ந்து மைதானங்களில் சோடா விற்று தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இவரது கால்பந்து திறமையை அடையாளம் கண்ட காவல்துறை அதிகாரி எம்.கே.ஜோசப், அவரை காவல்துறை அணியில் சேர்த்தார். 1989-ல் இந்திய அணியில் அறிமுகமான விஜயன், சர்வதேச போட்டியில் 12 நொடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தார்.
இந்திய அணியின் முதல் ‘ஆண்டின் சிறந்த வீரர்’ விருதைப் பெற்ற இவர், 2000 முதல் 2004 வரை இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். 70-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி 40 கோல்கள் அடித்துள்ள இவருக்கு, 15 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்த விஜயன், 2001-ல் ‘சாந்தம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் விஷாலின் ‘திமிரு’ படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் ‘கொம்பன்’, ‘கெத்து’ மற்றும் விஜய்யின் ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இவர் நடித்த ‘Mmmmm’ என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுப் பட்டியலிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரள காவல்துறையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட்டாக பணியாற்றி வரும் இவர், தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
