திருத்தணியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதுவே சமூகச் சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் கேட்காத மதுக்கடைகளைத் திறந்துவிட்டு, ஆண்கள் மதுவிற்காகச் செலவிடும் பணத்தையே பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்குகிறது என்றும், இந்நிலை மாற மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவத் துறைகள் சரிவர கவனிக்கப்படவில்லை என்றும், சுமார் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில் போதிய ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக, போதைக்கு அடிமையாகும் இளம் தலைமுறையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மது மற்றும் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
