ராமநாதபுரம்: அ.தி.மு.க.வின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்கள் சீனி காதர்மொய்தீன், பக்கர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகிய நான்கு பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நீக்கம் செய்தார்.
இந்நிலையில், கட்சி நடவடிக்கைக்கு உள்ளான சில மணி நேரங்களிலேயே அந்த நான்கு நிர்வாகிகளும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த கனிமொழி எம்.பி., வரவிருக்கும் தேர்தல் பணிகளில் தொய்வின்றி முழு வீச்சில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
