நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகச் செயலாளராக இருந்த செந்தில்நாதன், அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை மீறிய உறவு காரணமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற செந்தில்நாதனை, பெண்ணின் உறவினர்கள் பிடித்து வைத்துத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை அடுத்து, த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செந்தில்நாதனை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்த ஒருவர், பாலியல் புகாரில் சிக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.