மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில், வழக்கமான நோய் எதிர்ப்புச் சக்தி வழங்கும் திட்டத்தின் கீழ் (Vaccination Drive) குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. கக்ருவா கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆஷா பணியாளர் மூலம் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், மருந்து செலுத்திய சிறிது நேரத்திலேயே ஒன்றரை மாதக் குழந்தை ஒன்றின் உடல்நிலை மிக மோசமடைந்தது.

உடனடியாக மருத்துவ உதவிக்காகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தது. இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த குழந்தையைத் தவிர, அதே முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் மூன்று சிறுவர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது அவர்கள் தாதியா மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுகாதாரத்துறையைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.