மகாராஷ்டிர மாநிலம் புனேவில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு, வெளிநாட்டவர்கள் இருவர் சாலை ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புனேவின் பிம்பிள் நிலாக் பகுதியில் உள்ள ரக்ஷக் சௌக் அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், வாகன நெரிசல் மிகுந்த நேரத்தில் பல வாகன ஓட்டிகள் விதிகளுக்குப் புறம்பாகப் பாதசாரிகள் நடக்கும் நடைபாதையில் தங்களது வாகனங்களைச் செலுத்தினர்.

இதைக் கண்ட அங்கிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர், நடைபாதையின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்தனர். நடைபாதை என்பது பாதசாரிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், விதிகளை மீறியவர்களை மீண்டும் பிரதான சாலைக்கே செல்லுமாறு உறுதியுடன் வலியுறுத்தினர்.

 

சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, இந்தியாவில் நிலவும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டவர்கள் தலையிட்டு நமக்குச் சாலை விதிகளை நினைவூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக இணையவாசிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நடைபாதைகள் வாகன ஓட்டிகளுக்கானவை அல்ல என்பதை உணர்ந்து, மற்றவர்களின் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே சமயம், இதுபோன்ற விதிமீறல்களைத் தடுக்க காவல்துறையினர் கடுமையான அபராத நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.