உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில், தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி ஒருவரின் தலையில் மர்மமான முறையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி மாலை, பஸ்தௌலி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் லட்சுமி, தனது சகோதரர்களுடன் தகரக் கூரையால் வேயப்பட்ட கொட்டகையின் கீழ் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரெனக் கேட்ட பலத்த சத்தத்தைத் தொடர்ந்து, சிறுமியின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. முதலில் சிறுமி தவறி விழுந்து அடிபட்டதாகக் கருதிய பெற்றோர், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், சிறுமியின் மண்டை ஓட்டிற்குள் துப்பாக்கிக் குண்டு ஒன்று சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுமார் 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அந்த குண்டை வெற்றிகரமாக அகற்றினர்.
அதிர்ஷ்டவசமாக, துப்பாக்கிக் குண்டு முதலில் தகரக் கூரையைத் துளைத்துவிட்டு வந்ததால் அதன் வேகம் கணிசமாகக் குறைந்து, சிறுமியின் உயிர் தப்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காசிப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் வரும் போலீசார், இந்தக் குண்டு எங்கிருந்து வந்தது? ஏதேனும் கொண்டாட்டத்தின் போது சுடப்பட்டதா? அல்லது உரிமம் பெற்ற துப்பாக்கி ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
