அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது டி20 போட்டியில், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர் பட்டு எல்லையிலிருந்த கேமராமேன் ஒருவர் காயமடைந்த சம்பவம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில் 25 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய பாண்டியாவின் ஒரு சிக்ஸர், எல்லையில் நின்றிருந்த கேமராமேனின் தோள்பட்டையில் பலமாகத் தாக்கியது.

இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டு வீக்கம் உண்டானதால், இந்திய அணியின் மருத்துவர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்ததும், ஹர்திக் பாண்டியா நேரடியாக அந்த கேமராமேனிடம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவருக்கு ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுத்து ஆறுதல் கூறினார்.

 

மேலும், தற்செயலாக நடந்த இந்த விபத்திற்கு மன்னிப்பு கோரியதுடன் அவரை அன்புடன் ஆரத்தழுவி நெஞ்சை நெகிழ்வை வைத்தார். “அதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து அவரது முகத்திலோ அல்லது உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் இடத்திலோ படவில்லை” என்று பாண்டியா நிம்மதி தெரிவித்தார்.

இப்போட்டியில் திலக் வர்மாவின் 73 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி உதவியுடன் இந்தியா 231 ரன்கள் குவித்து, இறுதியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், களத்திற்கு வெளியே சக ஊழியர்களிடம் ஹர்திக் பாண்டியா காட்டிய இந்த மனிதாபிமானம் மற்றும் விளையாட்டுப் பண்பு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.