விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 20, சனிக்கிழமை) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்து ஒன்று நிலைதடுமாறிச் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தில் மோதியது.

35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் பலமாக மோதியதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த 35 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஓட்டுநரின் அதிவேகமே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.