தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் திரண்ட பெரும் கூட்டம் விஜய்க்கு உற்சாகத்தை அளித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள தவெக திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் விஜய்யைக் களமிறக்குவதன் மூலம் அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனுமதி தொடர்பான நடைமுறைகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் நிலையில், கொங்கு மண்டல அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.