பீகார் மாநிலம் நவாடா அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு வீடாகச் சென்று துணி வியாபாரம் செய்து வந்த முகமது அதார் உசேன் (45) என்ற தொழிலாளி, திருடன் எனத் தவறாகக் கருதப்பட்டு ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது மிதிவண்டி பஞ்சரானதால் உதவி தேடி ஒரு கும்பலை அணுகியுள்ளார்.

அப்போது அந்த கும்பல் அவரிடம் விசாரணை நடத்தி, அவரிடமிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டதோடு, ஒரு அறையில் அடைத்து வைத்து இரும்புத் தடி மற்றும் ஆயுதங்களால் விடிய விடியக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் அவரது உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

காவல்துறையினர் 2:30 மணியளவில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், ஆறு நாட்கள் உயிருக்குப் போராடிய உசேன் டிசம்பர் 12-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் அளித்த வாக்குமூலத்தில், சுமார் 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் தன்னைச் சித்திரவதை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நார்போலி காவல்துறையினர், இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த உசேனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.