பெங்களூரு தியாகராஜ நகரில் மனசாட்சியை உலுக்கும் வகையிலான கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவனை, அங்கிருந்த ஒரு நபர் எவ்விதக் காரணமும் இன்றி ஓடி வந்து ‘கால்பந்து’ போல ஆக்ரோஷமாக எட்டி உதைத்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் வேகத்தில் அந்தச் சிறுவன் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

“>

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிறுவர்கள் மீதான இத்தகைய வன்முறைச் செயல்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காயமடைந்த சிறுவன் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.