கேரள மாநிலம் தலசேரி நகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற பிரசாந்த் என்பவருக்கு, 18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கில் தற்போது 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பிரசாந்த் உள்ளிட்ட 9 பேருக்கு 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இத்தகைய கடுமையான தீர்ப்பு வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்தத் தண்டனை காரணமாக பிரசாந்த் தனது கவுன்சிலர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சட்ட விதிமுறைகளின்படி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்தத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை அல்லது நிறுத்தி வைப்பு ஆணையைப் பெற்றால் மட்டுமே அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒருவேளை மேல்முறையீட்டில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படாவிட்டால், அவர் தனது பதவியை இழக்க நேரிடும் என்பதுடன் அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலும் உருவாகும்.