தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், எம்.ஆர்.பி. (MRP) செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் நேற்று மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கோரிக்கை பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மாலையில் போராட்டத்தைக் கைவிட மறுத்த 550 செவிலியர்களைப் போலீசார் கைது செய்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். ஆனால், அங்கேயும் செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால் அந்த இடமே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. ​இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது செவிலியர் பணியில் காலி இடங்களே இல்லாத நிலை உள்ளதாகத் தெரிவித்தார்.

காலி பணியிடங்கள் உருவானால் மட்டுமே பணி வழங்க முடியும் என்றும், ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையிலேயே பணி நிரந்தரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை என்றாலும், நடைமுறை விதிமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறிய அமைச்சர், இந்த அரசு யாரையும் கைவிடாது என்றும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் விளக்கமளித்தார்.