அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அவருக்கு செக் வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.
உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் உள்ளிட்ட சுமார் 75 நிர்வாகிகள் இன்று அதிமுகவில் இணைந்தனர். அவர்களை எடப்பாடி பழனிசாமி நேரில் வரவேற்றது, செங்கோட்டையன் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்ப அதிமுக தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.
இன்று ஈரோட்டில் செங்கோட்டையன் தலைமையில் தவெகவி ன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் வேளையில், அதே மாவட்டத்தில் எடப்பாடி இந்தச் சேர்க்கையை நடத்தியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையன் ஒருங்கிணைக்கும் முதல் பெரிய மாநாடு இது என்பதால், அதிமுகவினர் அங்கே செல்வதைத் தடுக்க எடப்பாடி இந்த வியூகத்தை வகுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைக்க எடப்பாடியும், புதிய கோட்டையை உருவாக்க செங்கோட்டையனும் மோதிக் கொள்வது ஈரோடு அரசியலைத் தகிப்படையச் செய்துள்ளது.
