ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், த.வெ.க சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் நின்று தொண்டர்களுக்கு கையசைத்த கட்சித் தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இக்கூட்டத்தில் பேசிய விஜய்,
“ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கைத் தலைவர். ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல் அவர். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பெரியார்” என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிரிகள் யார் என்பதைக் கூறிவிட்டுத்தான் களத்தில் இறங்கியிருக்கிறோம். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், அரசியல் களத்திற்கே சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை” என்றார்.
விஜய் பேசிய ‘களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம்’ மற்றும் ‘ஈரோடு கடப்பாரை பெரியார்’ என்ற வார்த்தைகள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘விஜில்’ சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழாவும், ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான், பாரதியார் மற்றும் பெரியார் குறித்துப் பேசினார். அப்போது, “பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்துத் தள்ளுவேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த உரைக்கு எதிர்வினையாகத்தான், விஜய் ‘ஈரோடு கடப்பாரை பெரியார்’ என்று பேசியதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், விஜய் – சீமான் உரைகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
