உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் இன்ஸ்டாகிராம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 48 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் புகைப்படங்களை மட்டும் பகிரும் தளமாக இருந்த இன்ஸ்டாகிராம், பின்னர் குறுகிய வீடியோக்களை பதிவேற்றும் வசதியை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்டா ரீல்ஸ் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்ஸ்டா ரீல்ஸ்களை அதிகமாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. அதிக லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்க பல்வேறு வகையான ரீல்ஸ்களை பயனர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை இனி டிவி திரைகளிலும் பார்க்கும் வசதியை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, அமெரிக்காவில் Amazon Fire TV ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முயற்சியின் மூலம், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
