திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (43) கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த துர்கா (30) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துர்கா கணவரை பிரிந்து மணிமங்கலம் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பச்சையப்பன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை சந்திக்க மணிமங்கலத்திற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், துர்கா பச்சையப்பனின் கழுத்தில் இருந்த துண்டை பயன்படுத்தி அவரை வெளியே இழுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கழுத்து அழுத்தம் காரணமாக பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து துர்கா காவல் நிலையத்தில் நேரில் சரணடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
