சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில், சிறுவன் ஒருவன் தவறுதலாக மோதியதில் சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட அரிய வகை தங்கத் திருமணக் கிரீடம் சேதமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சீனாவைச் சேர்ந்த அழகு கலை நிபுணர் ஜாங் கையி என்பவருக்கு அவரது கணவர் ஜாங் யுடாங் என்பவரால் திருமணப் பரிசாக வழங்கப்பட்ட இந்த பீனிக்ஸ் பறவை வடிவிலான கிரீடம், முழுக்க முழுக்கப் பசும் பொன்னால் கையால் செதுக்கப்பட்டதாகும்.

கண்காட்சியின் போது அங்கிருந்த கண்ணாடிப் பேழையைச் சிறுவன் ஒருவன் விளையாட்டாகத் தொட்டுத் தள்ளியதில், அந்தப் பாதுகாப்பு மூடி சரிந்து விழுந்து உள்ளே இருந்த விலைமதிப்பற்ற கிரீடம் தரையில் மோதி சிதைந்தது. இதன் மதிப்பு சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைச் சீரமைப்பதற்கான கூலி மட்டுமே சுமார் 40 லட்சம் ரூபாயைத் தாண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான காணொலியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஜாங் கையி, இச்சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உணர்வுப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ள இந்தக் கிரீடம் விற்பனைக்கு உரியது அல்ல என்பதால் இதன் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இது தொடர்பாகச் சிறுவனின் குடும்பத்தினரிடம் தான் எவ்வித இழப்பீடும் கோரவில்லை என்றும், கலைப் பொருட்களைக் கையாளும்போது பார்வையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தக் காணொலியைப் பகிர்ந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் கிரீடம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், அதன் மூலம் இழப்புகளைச் சரிசெய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.