திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடிகர் விஜய் மவுனம் காப்பதாகக் கூறி, அரசியலில் அமைதியாக இருக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக (தமிழக வெற்றி கழகம்) நிர்வாகி அருண் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் சகோதர மனப்பான்மையுடன் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த நிலைமை திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது.
மதுரை கள்ளழகர் திருவிழாவின் போது, அழகர் ஊர்வலம் வரும்போது இஸ்லாமிய சகோதரர்கள் அதனை மரியாதையுடன் வழிபடுவது அனைவரும் அறிந்ததே. அதுபோல சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், அங்குள்ள வாவர் மசூதிக்கும் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாமல் உருவாக்கப்பட்ட பிரச்னை. தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையுடன்தான் உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவும், திமுகவும் பயன்படுத்த முயற்சிக்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.
