கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் பத்து வயது மகனைப் பிரிந்து, காவல் துறை ஓட்டுநர் ஒருவருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனிகா ஏற்கனவே தனது முதல் கணவர் மதனிடமிருந்து பிரிந்து, சந்தன் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

சமூக வலைதளங்களில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மோனிகாவிற்கு, பெங்களூரு எச்.எஸ்.ஆர். லேவுட் காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் ராகவேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான ராகவேந்திராவுடன் ஏற்பட்ட இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது.

இந்நிலையில், ராகவேந்திராவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த மோனிகா, அதற்குத் தடையாக இருந்த தனது கணவர் சந்தன் மீது காவல் நிலையத்தில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகச் சந்தனைப் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நேரத்தில், மோனிகா வீட்டில் இருந்த நகை மற்றும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணத்துடன் தனது காதலரான காவலர் ராகவேந்திராவுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார்.

விசாரணையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சந்தன், தனது மனைவியும் காவலரும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரண்டு கணவர்களை விட்டுவிட்டு ஒரு பெண் காவலருடன் சென்ற இந்த வினோதச் சம்பவம் மைசூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.