பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில், 40 வயதான அமர்நாத் ராம் என்ற நபர், தனது மூன்று பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமர்நாத் ராமின் மனைவி இறந்த நிலையில், அவர் தனது மகள்கள் அனுராதா (12), ஷிவானி (7), ராதிகா (6), மற்றும் மகன்கள் சிவம் (6), சந்தன் (5) என ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தக் கொடூரமான முடிவை எடுப்பதற்கு முன், அமர்நாத் ராம் தனது குழந்தைகளுக்கு முட்டைகளைச் சமைத்துக் கொடுத்துள்ளார். பின்னர், தனது மனைவியின் சேலைகளையே தூக்குக் கயிறுகளாகப் பயன்படுத்தி, தனது மூன்று மகள்களுக்கும், தானும் ஒரு பெட்டியின் மீது ஏறி நின்று குதிக்குமாறு கட்டளையிட்டு, தானும் குதித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அமர்நாத் ராம் மற்றும் அவரது மூன்று மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக, அவரது மகன்கள் இருவரும் குதிக்காமல் அந்தப் பெட்டியிலேயே நின்றதால் உயிர் பிழைத்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் மறைவுக்குப் பிறகு ஐந்து குழந்தைகளையும் தனியாக வளர்ப்பதில் அமர்நாத் ராம் சிரமப்பட்டதாகவும், கிராமவாசிகள் சிலர், ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தாயையும் தந்தையையும் இழந்துவிட்ட இரண்டு சிறுவர்கள் தவித்து வரும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.