நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம், நேற்று  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் சூழல் குறித்து பேசினார். தவெக-வில் இணையும் நபர்கள் குறித்துப் பேசுகையில், “அ.தி.மு.க. மட்டுமல்ல, தி.மு.க.-விலிருந்தும் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள். கூட்டணி அரசியல் எவ்வாறு அமையும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. தேர்தல் களம் எப்படித் திரும்பும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் மீது இளைஞர்கள் மற்றும் மாணவிகளிடம் நிலவும் ஈர்ப்பை எடுத்துரைக்கும் வகையில், தனது தனிப்பட்ட அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார். “சமீபத்தில் இரண்டு மருத்துவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது சுமார் 50 மாணவிகள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினர். அதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, ‘நீங்கள் விஜயுடன் இணைந்துள்ளீர்கள்; அதற்காகவே வாழ்த்த விரும்புகிறோம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்,” என செங்கோட்டையன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவெக-க்கு போட்டியாக எந்த அரசியல் சக்தியையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. மக்கள் சக்தி நமக்குப் பின்னால் உள்ளது,” என்றார். விஜயின் தலைமையை வலியுறுத்திய செங்கோட்டையன், “மக்களின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகும் நாள் விரைவில் வரும். தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கும் ஆற்றல் விஜய்க்கு மட்டுமே உள்ளது. இளைஞர்களை எழுச்சியடையச் செய்யும் சக்தி அவரிடமே இருக்கிறது. 2026 மே மாதத்தில், விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் வரலாறு எழுதப்படும்,” என தெரிவித்தார்.

மேலும், “விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இடம் பெற முடியும். அதுவே நமது இலக்கு. நான் சேர வேண்டிய அரசியல் பாதையில் சரியான நேரத்தில் சேர்ந்திருக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.