கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற ‘கோட் இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான நிர்வாகக் குறைபாடுகளால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்துடன் சமூக ஊடகங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், ஒரு ரசிகரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
After seeing the ticket money went down the drain, guy is taking the carpet home to balance the loss pic.twitter.com/iJGbnLE5qg
— Political Kida (@PoliticalKida) December 13, 2025
மெஸ்ஸி சிறிது நேரமே தோன்றியதால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, ஏமாற்றமடைந்த ஒரு ரசிகர் மைதானத்தில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் ஒரு துண்டைத் தன் தோளில் சுமந்து வெளியேறும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் செய்தியாளர் ஒருவர், ஏன் கம்பளத்தை எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “மெஸ்ஸியின் முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை.
எனது டிக்கெட் பணம் வீணாகிவிட்டது. அதனால் நஷ்டத்தை ஈடுகட்ட வீட்டிற்கு கம்பளத்தை எடுத்துச் செல்கிறேன். வீட்டில் இதைப் போட்டுக்கொண்டு பயிற்சி செய்வேன்” என்று அந்த ரசிகர் வேடிக்கையாகப் பேசியுள்ளார். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்ற ஏமாற்றமே அவரது இந்தச் செயலுக்குக் காரணமாகும்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மெஸ்ஸியைச் சூழ்ந்து கொண்டதால், அவர் மைதானத்தில் பத்தே நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்து வெளியேற நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், நாற்காலிகளை உடைத்து, பாட்டில்களை வீசி எறிந்து, தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
