பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் நிஷாத். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்து, அதற்கான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அந்த பெண் அமித் நிஷாத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வந்ததாகவும், அதற்கு அமித் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்று இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது, அந்த பெண் அமித் நிஷாத்தை கத்தியால் அந்தரங்க உறுப்பில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமித், அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பின்னர் அமித் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ஓட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த அமித் நிஷாத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்துள்ள அமித்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.