கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் செயல்படும் லிமா ஃபேமிலி எரிக்சன் மெமோரியல் சாப்பல் என்ற இறுதிச் சடங்கு மையத்தின் மீது, அலெக்சாண்டர் பினோன் (27) என்ற இறந்த மகனின் ஆடைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவரது மூளையை தவறுதலாகத் தந்தையிடம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி, மோசமான அலட்சியம் மற்றும் மனித உடலைத் தவறாகக் கையாண்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குடும்பத்தார் முழுச் சேவைக்கும் அடக்கச் செலவுக்கும் சுமார் $10,000-க்கும் அதிகமாகச் செலுத்தியுள்ளனர்.
இறுதிச் சடங்கு இயக்குநர் அனிதா சிங் என்பவர், அலெக்சாண்டரின் தந்தையிடம், அது உடைகள் அடங்கிய பை என்று கூறி ஒப்படைத்துள்ளார்.
துக்கம் தாங்காதத் தந்தையும், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று, நேரடியாகச் சலவை இயந்திரத்தில் போட்டுள்ளார். பின்னர், சலவை இயந்திரத்தில் பார்த்தபோது, அது மனித மூளைத் திசுக்கள் போல இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் பையைத் திரும்ப இறுதிச் சடங்கு மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
சில வாரங்களுக்குப் பிறகு, அது அலெக்சாண்டரின் மூளை தான் என்று உறுதிப்படுத்திய நிறுவனம், அந்த மூளையை ஒரு பெட்டியில் வைத்து, இரண்டரை மாதங்களுக்குத் திறந்த வெளியில் (Courtyard) வைத்திருந்ததாகவும், துர்நாற்றம் காரணமாகவே மற்றொரு ஊழியர் அதனைக் கண்டுபிடித்ததாகவும் வழக்கில் மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
