ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைக் கேட்டுச் சேமிக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோட்டல்களில் அடையாளச் சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை நகல்களை வாங்குவதால், அதில் உள்ள முகவரி உள்ளிட்ட தனிப்பட்டத் தகவல்கள் கசிந்து முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இது ஆதார் தனியுரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதியின்படி, ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் ஆதாரைச் சரிபார்க்க, QR கோடு ஸ்கேன் முறை அல்லது புதிய ஆதார் செயலி போன்ற காகிதமில்லா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

UIDAI அறிமுகப்படுத்தியுள்ள Aadhaar App மூலம் QR கோட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக அடையாளத்தை உறுதி செய்ய முடியும். இதனால், ஆதார் அட்டை நகல் கொடுப்பது, கைரேகை வைப்பது, போன்றவற்றுக்காக ஆதார் எண்ணையோ, முகவரியையோப் பகிர வேண்டிய அவசியம் இருக்காது. இது, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.