முதியோர் இல்லங்கள் பொதுவாக அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழும் இடமாகக் கருதப்படும் நிலையில், அங்கிருந்த ஒரு முதிய பெண்மணி விதிகளை மீறி இரவு நேரத்தில் பார்ட்டி கொண்டாடியதால் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கொண்ட அந்தப் பாட்டி, முதியோர் இல்லத்தில் சக பெண்மணிகளைச் சேர்த்துக்கொண்டு நள்ளிரவில் பெரிய அளவில் மது விருந்து கொடுத்துக் கொண்டாடியுள்ளார். இல்லத்தில் உள்ள பல முதியவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு மது அருந்துவதற்கும் அனுமதியின்றி பார்ட்டி நடத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.

“>

இதனால், நிர்வாகம் இதனை ஒரு தீவிர விதிமீறலாகக் கருதி, அந்தப் பாட்டிக்கு நோட்டீஸ் வழங்கி அவரை முதியோர் இல்லத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையால் சற்றும் மனம் தளராத அந்தப் பாட்டி, தனக்குக் கிடைத்த நோட்டீஸைப் படித்துக் காட்டிவிட்டு, பின்னர் அந்தப் பேப்பரை ஆவேசமாகக் கிழித்துப் போடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தான் இனி வரும் நாட்களிலும் இன்னும் பிரம்மாண்டமாகப் பார்ட்டிகளை நடத்தப் போவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதனால் சிலர் முதியோர்களின் உடல்நலம் மற்றும் இல்லத்தின் விதிகளைக் காக்க நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரி என்று கூறினாலும், பல இளைஞர்களும் நெட்டிசன்களும் “வயது என்பது வெறும் எண் தான், முதியவர்களுக்கும் தங்களுக்குப் பிடித்தபடி சுதந்திரமாக வாழ உரிமையுண்டு” என்று கூறி அந்தப் பாட்டியின் துடிப்பான குணத்தைப் பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.