மகாராஷ்டிர மாநிலம் கோபோலியில் உள்ள புகழ்பெற்ற ஜெனித் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற சுமார் 80 சுற்றுலாப் பயணிகள், திடீரென பெய்த கனமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்தனர்.
இதனால் மும்பை சென்ட்ரல், செம்பூர் மற்றும் காட்கோபர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த சுற்றுலாப் பயணிகளை மீட்பதற்காக, உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக களமிறங்கினர். சீறிப்பாய்ந்த வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிர மீட்புப் பணியின் மூலம் சிக்கியிருந்த 80 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாராயண் நிர்குடே, பகவான் நிர்குடே, அக்ஷய் ஜாதவ் உள்ளிட்ட பல உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் முக்கியப் பங்காற்றினர். பருவமழை காலங்களில் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாம் உள்ளே செல்லும்போது வானிலை சாதாரணமாகத் தெரிந்தாலும், மலைப்பகுதிகளில் பெய்யும் மழையினால் திடீரென நீர்மட்டம் ஆபத்தான அளவிற்கு உயரக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
