பங்களாதேஷைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், வ்லோகருமான (Vlogger) பில்லா வாவ் என்பவர் தனது பைக்கில் கிராமப்புறச் சாலை ஒன்றில் பயணித்தபோது, அங்கிருந்த சிறுவர்கள் சிலர் அவரைச் சூழ்ந்துள்ளனர். ஆரம்பத்தில் அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அன்பாகப் பேசிய அந்தச் சிறுவர்கள், அடுத்த சில நிமிடங்களில் அவரிடம் பணம் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில், ஒரு சிறுவன் பைக்கின் சாவியைப் பிடுங்கியதால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, மெஸ்ஸியின் அர்ஜென்டினா ஜெர்சி மற்றும் ஆரஞ்சு நிற டவுசர் அணிந்திருந்த ஒரு சிறுவன், ஆத்திரமடைந்து பைக் ரைடரை கீழே தள்ளியதோடு, தனது காலணியைக் கழற்றி அடிக்கவும் பாய்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரைடர், சட்டென்று அந்தச் சிறுவனை இரு கைகளாலும் தூக்கி, சாலையோரம் இருந்த  வயல்வெளிப் பள்ளத்திற்குள் வீசி எறிந்தான்.

https://www.instagram.com/reel/DaZdw2XxLwu/?igsh=MWpxM3pmenc3M3R0eg==

அந்தச் சிறுவன் உருண்டு கீழே விழுந்து, அடுத்த நொடியே எழுந்து நின்ற 15 வினாடி வீடியோ காட்சிகள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதைப் பார்த்த சிலர், “இன்றைய நாளில் நான் பார்த்த மிக விசித்திரமான, நகைச்சுவையான வீடியோ இதுதான்; அந்தப் பையன் ஹீரோவாக மாற நினைத்து 0.2 செகண்டில் ஜீரோவாகிவிட்டான்” என்று கிண்டலாகக் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதே நேரத்தில், “இது அப்பட்டமான அராஜகம்; அந்தச் சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? இந்த பைக் ரைடரை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும்” எனப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும், கவலைகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

எனினும், சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்குவதற்காக இந்த ஒட்டுமொத்த சம்பவமும் திட்டமிட்டு நடிக்கப்பட்டதா அல்லது நிஜமாகவே நடந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.