மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ள ஈரான் தலைவர்கள் அனைவரையும், ஒரே குண்டில் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவால் அழிக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “காமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானின் ஒட்டுமொத்த தலைவர்களும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள்; நாங்கள் நினைத்தால் ஒரே ஷாட்டில் அவர்கள் அனைவரையும் காலி செய்ய முடியும் என்றாலும், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அதைச் செய்யவில்லை” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காமேனியின் உடல், தற்போது டெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வரும் ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் டிரம்பின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு, அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினமான ஜூலை 4 அன்று ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
அதில், “மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது; நீங்கள் காமேனியைக் கொன்றதன் மூலம் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்திருக்கிறீர்கள், இப்போது அதன் கொள்கை வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது” என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவிற்கு என்று சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ அல்லது மானமோ கிடையாது என்பதால், தலைவரை இழந்து வாடும் ஈரான் மக்களின் இந்தத் துக்கத்தை அமெரிக்காவால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்றும் ஈரான் தூதரகம் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளது.
