பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி (39) சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘

சிறகடிக்க ஆசை’, ‘பனி விழும் மலர் வனம்’, ‘பாக்கியலட்சுமி’ போன்ற பல தொடர்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர், கணவர் சதீசுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகச் சில நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை, முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை நடத்த ராஜேஸ்வரி திட்டமிட்ட நிலையில், அதற்காகக் கிடைத்த வீட்டின் குத்தகைத் தொகை ₹13 லட்சத்தைப் பயன்படுத்தக் கணவர் சதீஷ் மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதும், இதனால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற ராஜேஸ்வரி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.