அமெரிக்காவில் விசா தொடர்பான கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக, சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்து, அங்கே குழந்தை பெற்று, அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முயற்சிக்கும் நடைமுறையைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது அனுமதிக்கப்படாது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.இந்நிலையில், குழந்தை பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், “குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்காக அமெரிக்காவில் பிரசவம் செய்வதே பயணத்தின் முதன்மையான நோக்கம் என்று விசா அதிகாரிகளுக்குத் தெரியவந்தால், அத்தகைய சுற்றுலா விசா விண்ணப்பங்கள் மறுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.