திருமணம் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடிப் பகிரப்பட்டு வரும் நிலையில், மணமகனும் மணமகளும் மணமேடையில் அமர்ந்து சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, மணமகள் எடுத்துரைத்த ஒரு சத்தியப் பிரமாணம் அதிர்ச்சியையும் நகைச்சுவையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. மணமகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சத்தியப் பிரமாணத் தாளில், “தேவைக்கேற்ப, சிறந்த, ஆரோக்கியமான, வளமான, நல்லொழுக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தை நாட்டிற்காக இணைந்து உருவாக்குவோம்” என்று இருந்த வாசகத்தை மணமகள் சத்தமாகப் படித்தார்.
இந்தக் கூற்றைக் கேட்ட மணமகன் குழப்பத்துடன் என்ன இது என்று கேட்க, அருகில் இருந்த மணமகள் புன்னகையுடன், “குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று அர்த்தம்” என விளக்கம் அளித்தார். இந்த திடீர் மற்றும் வெளிப்படையான பதிலால் மணமகனும், மணமேடையில் இருந்த உறவினர்களும் கலகலவென சிரித்ததால், இறுக்கமான சூழல் உடனடியாக நகைச்சுவையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாறியது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மரபுகள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில் இத்தகைய இயல்பான மற்றும் கலகலப்பான தருணங்கள், திருமண நிகழ்வை இன்னும் மறக்க முடியாததாக மாற்றுகிறது.
