சுப்ரமணி என்பவரின் மகள் மீனாட்சி (வயது 28). இவர் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை வெற்றியூரில் வசிக்கும் சத்தியா என்ற பெரியசாமியுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.

பெரியசாமி அம்பத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலைக்குச் சேர்ந்த பிறகு, மீனாட்சியும் பெரியசாமியும் திருமணம் செய்து கொள்ளாமல் அம்பத்தூரில் வாடகை வீடு எடுத்து ஐந்து வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ஐந்து வருடங்கள் கழித்து, பெரியசாமியின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். பெற்றோரை சமாதானப்படுத்தி வருவதாக மீனாட்சியிடம் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்ற பெரியசாமி, திரும்பி வரவில்லை. புதுக்கோட்டை விராலிமலையில் பெரியசாமிக்குத் திருமணம் நடக்கவிருப்பதாக மீனாட்சிக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு சென்று பெண் வீட்டாருக்கு விஷயத்தைக் கூறி அந்தத் திருமணத்தை மீனாட்சி தடுத்து நிறுத்தினார். பிறகு பெரியசாமியின் குடும்பத்தினர் சமாதானம் பேசுவதாகக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த மீனாட்சி அதிக அளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸ் விசாரணையில், பெரியசாமி மீனாட்சியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தனது பெற்றோர் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் பெரியசாமியின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி, மீனாட்சி-பெரியசாமியை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.