அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, ஆலந்தூர் பாரதி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் மூவரும் திமுக தலைமையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்புவதாகவும், இவர்களை ‘கொத்தடிமைகள்’ என்றும் ‘அடிவருடிகள்’ என்றும் சாடியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், திமுக அரசின் தோல்விகளையும், ஊழல்களையும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும் மக்கள் முன் அம்பலப்படுத்தியதால், அதற்குப் பயந்து ஸ்டாலின் ஆதரவாளர்களாகிய இந்த மூவரும் எடப்பாடியார் மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்துள்ளதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அரசு இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, தமிழக மக்களை கடன்காரர்களாக்கி விட்டதாக ஜெயக்குமார் சாடியுள்ளார். ஊழல் அமைச்சர் ரகுபதி, தாங்கள் “அனுமதிக்கப்பட்ட அளவில்தான் கடன் வாங்கி இருக்கிறோம்” என்று ‘சப்பை கட்டு’ கட்டுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவு முழுவதையும் கடன் வாங்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீட், நெல்லின் ஈரப்பதம், கோவை-மதுரை மெட்ரோ ரயில் போன்ற பிரச்சனைகளை திமுக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்காமல் தீர்க்க முயற்சி செய்யாமல், அதிமுக ஏன் டெல்லியில் பேசி தீர்க்கவில்லை என்று ரகுபதி கேட்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருப்பவர்கள் திமுக அமைச்சர்கள்தான்; தங்கள் மீதான வழக்குகளின் வீரியத்தைக் குறைக்க டெல்லிக்குச் சென்று அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கும் இவர்கள், தமிழக மக்களுக்காகப் ஏன் போராடவில்லை என்று கேட்டுள்ளார்.

எடப்பாடியார் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்றால், திமுக அரசு உடனே ராஜினாமா செய்யட்டும், எடப்பாடியார் நிறைவேற்றிக் காட்டுவார் என்று சவால் விடுத்துள்ளார். முடிவில், அறிவாலயத்தின் கைப்பொம்மைகளாக இருக்கும் இந்த மூவரையும் ‘அரண்மனை நாயே, அடக்கடா வாயை, இல்லையென்றால் அடக்கப்படுவாய்’ என்ற கருணாநிதியின் வசனத்தைக் கூறி எச்சரித்துள்ளார்.