தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள தன் காதலியின் வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை, காதலியின் தாயார் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 19 வயது இளைஞர் என்றும், அவர் பி.டெக் படித்து வந்தார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காதலியின் தாய் தன் மகளின் கர்ப்பம் குறித்துப் பேச, இளைஞரையும் குடும்ப உறுப்பினர்களையும் வீட்டிற்கு வரவழைத்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்ணின் தாயார், முதலில் தன் மகளைத் தாக்கியுள்ளார். அப்போது, இளைஞர் தலையிட முயன்றபோது, அவரையும் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவத்தையடுத்து, பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும், இந்தச் சண்டையில் காயமடைந்த அவரது காதலிக்கும் உடைந்த எலும்பு மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணையின் முதற்கட்டத் தகவலின்படி, இந்த இளைஞர் மற்றும் கல்லூரி மாணவியின் காதலுக்கு, பெண்ணின் தாயார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி இருவரும் பழகி வந்துள்ளனர். இருவரும் பத்தாம் வகுப்பு முதல் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும், அந்த மாணவர் பி.டெக் படிப்பும், மாணவி வேறு ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பும் படித்து வந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.