கேரளாவைச் சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவி ஒருவர் பெங்களூருவில், தன் கழுத்தில் ஏற்பட்டக் காயங்களை மறைப்பதற்காகக் காதலனிடம் பொய் சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 6-ஆம் தேதி மடிவாலா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் 33 வயதுக் கார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.
எனினும், வழக்கை விசாரித்த போலீஸார், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் ரயில் நிலையப் பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், மாணவி குறிப்பிட்டபடி எந்த ‘கும்பலும்’ வரவில்லை என்பதும், மாறாக மாணவியும், ஓட்டுநரும் இணக்கமாகச் சிரித்தபடியே ஒன்றாகச் சுற்றித் திரிந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
கழுத்தில் ஏற்பட்டக் கீறல் காயங்களைக் கண்ட காதலன் கேள்வி கேட்டபோது, அவரிடம் உண்மையைக் கூறப் பயந்த மாணவி, பாலியல் வன்கொடுமை நாடகத்தை அரங்கேற்றியது அம்பலமானது. இதனையடுத்து, பொய்யானப் புகார் அளித்த மாணவி மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து, ஓட்டுநரை விடுவித்தனர்.
