சென்னையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (24) என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ‘பி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அவர் பதிவு செய்யப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூரில் விஜய் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சத்யா முக்கிய குற்றவாளியாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு சத்யா தி.வொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பின்தொடர்ந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க சத்யா அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்தார். தொடர்ந்து விரட்டிய கும்பல் சத்யாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றது.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தி.வொற்றியூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்துக்குச் சம்பந்தமான சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.