சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த, திருமணமாகாத பொறியாளரும், டியூஷன் சென்டர் நடத்தி வந்தவருமான பாரதி (38) என்பவர், கள்ளக்காதலன் உதய்சரணால் (49) கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிக்கும், சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரியான உதய்சரணனுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அறிமுகம் ஏற்பட்டது.

உதய்சரணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், பாரதியுடன் முதலில் நட்பாகப் பழகத் தொடங்கினார். நாளடைவில், இது கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பாரதிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, உதய்சரண் தான் பணிபுரியும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

ஆனால், பாரதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாரதியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியதில், பாரதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

இதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து, உதய்சரணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் பாரதியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸ் விசாரணையில் உதய்சரண் அளித்த வாக்குமூலத்தில், சம்பவ நாளன்று பாரதியுடன் இரவு நேர சினிமாவுக்கு சென்றுவிட்டு, டியூஷன் சென்டரில் தங்கி இருந்ததாகவும், அப்போது பாரதி, “உங்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உதய்சரண், பாரதியைக் கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்த தலையணையால் முகத்தை அமுக்கியுள்ளார். இதில் பாரதி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

கொலையை மறைக்க பாரதி மயங்கி விழுந்ததாக உதய்சரண் நாடகமாடிய நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலைச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, உதய்சரணை கைது செய்த காவல்துறை, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.